வட இலங்கையில் சாதி: பிரித்தானிய காலனிய அரசின் கொள்கையும் நடைமுறைகளும் - 19ம் நூற்றாண்டின் நடுப்பகுதி குறித்த நுண்ணாய்வு - பகுதி 3 | யாழ்ப்பாணத்து சாதியம் | கந்தையா சண்முகலிங்கம்
Description
கிறிஸ்தவ மிசனரிகளின் மதம் பரப்பும் பணியும் சாதிப் பிரிவினைகளாலும், சாதி உணர்வாலும் பாதிக்கப்பட்டது. மிசனரிகள் தமது பணிகளை ஆரம்பித்து பல்லாண்டுகள் கழிந்த பின்னரும் 1850களில் கூட சாதிப்பிரச்சினை பலமான ஒரு சக்தியாக இருப்பதை உணரமுடிந்தது.
யாழ்ப்பாண நகரத்தில் வண்ணார்பண்ணை வெல்சியன் மெதடிஸ் பாடசாலையில் சலவைத்தொழில் சாதியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் சேர்க்கப்பட்ட போது உயர்சாதியினர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால் அந்த மாணவரை பாடசாலையில் இருந்து மிசனரிகள் நீக்கிவிட்டனர். பின்னர் 1847ஆம் ஆண்டில் வெல்சியன் மிசன் பாடசாலை ஒன்றில் நளவர் சமூகத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் சேர்க்கப்பட்டபோது, கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. உயர்சாதி மாணவர்கள் தாமாகவே பாடசாலையில் இருந்து விலகிக்கொண்டனர். பாடசாலைகளில் வெவ்வேறு சாதிப் பிள்ளைகளிடையே ஊடாட்டமும், தொடர்பும் ஏற்பட்டமை நல்லதொரு முன்னேற்றமே ஆயினும் சாதி உணர்வு தமிழர்களிடையே மேலோங்கியே இருந்தது.
கிறிஸ்தவ மதத்தில் எந்தவொரு பிரிவிலாவது ஒருவர் புதிதாகச் சேர்ந்து கொண்டால், அவர் தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவராகவே இருத்தல் வேண்டும் என்று சந்தேகிக்கும் நிலை யாழ்ப்பாணத்தில் நீடித்தது. இவ்வாறே கிறிஸ்தவப் பாடசாலையில் கல்விகற்பவர்களும் சந்தேகக் கண்கொண்டு நோக்கப்பட்டனர். அரசாங்க நிர்வாகத்துறையினராலும் கிறிஸ்தவ மிசனரிகளாலும் யாழ்ப்பாணத்தில் ஆழவேரூன்றியிருந்த சாதி மனப்பாங்கில் மாற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை.
இந்தியாவின் சாதிமுறையும் யாழ்ப்பாணத்தின் சாதிமுறையும் வேறுபட்டவை. இந்தியாவில் சாதிப்பாகுபாடும் வேற்றுமைகளும் யாழ்ப்பாணத்தோடு ஒப்பிடுகையில் மிகத் தீவிரமானதாக உள்ளது. இந்திய சாதிமுறையின் திரிபுபட்ட ஒரு வடிவமாகவே யாழ்ப்பாணத்தின் சாதிமுறை காணப்படுகிறது
வன்னியர் சாதி அல்லது ‘வன்னிகுறு’ (vannihuru) என்பதை வன்னி மாவட்டத்திலோ, நுவரகலாவியாவிலோ தனியான சாதிப்பிரிவாக அடையாளம் காண முடியாது. இதனை ஒரு சமூக வகுப்பாக அல்லது உபகுழுவாக அடையாளம் காண்பதே சரியானது. தம்மிடையே போட்டியிடும் வேளாளர் குழுக்கள் வன்னியில் இருந்து வந்த பின்புலத்தில் வன்னியர் என்ற உபகுழு மேலெழுந்தது எனலாம்.
நுவரகலாவியவின் சமூக கட்டமைப்பில் சாதி மிகமுக்கியமான கூறாகும், சாதியின் தாக்கம் அங்கு வெளிப்படையாக தெரிந்தது. அம்மாவட்டம் பலகிராமங்களின் கூட்டத்தொகுதியாக விளங்கியது. ஒவ்வொரு கிராமமும் சாதி அடிப்படையில் வேறுபட்டதாக இருந்தது. பிரித்தானிய அதிகாரிகள் கொய்கம சாதியினருக்கு (தமிழ் வேளாளர்களுக்கு சமதையானவர்கள்) உயர்மதிப்பை வழங்கினர்.